குசேலன்:
1. What do you think of the judgement that M F Husain's painting are not obscene?
பதில்: பல தவறான முன்னுதாரணங்களை இது அனுமதிக்கும் என அஞ்சுகிறேன். கடவுளர்களை நிர்வாணமாக காட்டுவது அவமதிப்பு இல்லை என்று கூறுவது போன்ற தோற்றம் துரதிர்ஷ்டவசமானது. யாராவது முகம்மது, கதீஜா அம்மையார், ஏசு ஆகியோரையும் அக்கோலத்தில் படம் வரைவது கலைஞனின் சுதந்திரமே என வாதிடும் வகையில் இந்த தீர்ப்பு முன்னோடியாக அமைந்து விட்டால் குழப்பமே.
2. Did the judges see the paintings before giving the judgement?
பதில்: பார்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
3. The mainstream media while being happy for the victory of artistic freedom; they are not showing the actual paintings to the public. why don't they publish the paintings and show it to the people if it is not obscene?
பதில்: காட்டினார்கள் போலிருக்கிறதே. இப்போது இல்லை, சர்ச்சைகள் முதலில் எழுந்த அச்சமயத்தில். கராத்தே ஹுசைனி அம்மாதிரியான சரஸ்வதியின் படத்துக்கு அனாயாசமாக சில பிரஷ் வீச்சுகளில் அழகான புடவை போட்டு விட்டார். மேலும் எம். எஃப். ஹுசைனையும் நிர்வாணமாக வரைந்தார். இதை ஏனோ சுதந்திர உணர்ச்சி கொண்ட அந்த நிர்வாணக் கலைஞன் ரசிக்கவில்லை.
4. When nude paintings are not obscene because they are artistic, why are porn films being banned and its participants prosecuted, don't they have their own artistic freedom?
பதில்: அம்மாதிரியும் கேஸ் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கூடுதுறை:
1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்தேர்தல் வந்துவிடும் என்று தோன்றுகிறதே?
பதில்: மத்தியில் வரக்கூடும் என்று தோன்றுகிறது. குஜராத்தில் மட்டும் தில்லு முல்லு செய்து காங்கிரஸால் நிஜமாக ஜெயிக்க முடிந்திருந்தால் இடை தேர்தல் நிஜமாகவே வந்திருந்திருக்கும். கம்யூனிஸ்டுகள் காங்கிரசை அவ்வளவு வெறுப்பேற்றி வந்தனர்.
2)நக்மா போய் 10 வருடம் ஆகிவிட்டது உங்களின் லேட்டஸ்ட் ஜொள்ளூ யார்?
பதில்: சொன்னா போச்சு. இதுக்கென்ன காசா பணமா? நான் போன வருடம் என்னுடைய காரில் தள்ளிக் கொண்டு போன த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகிய அந்த 4 பேருமேன்னு வைத்து கொள்ளலாமே. :)))
3. எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயாவதி,அஸ்ஸாம் கணபரிஷத்,தெலுங்குதேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன். இது உருப்படியாகுமா???
ஸ்ஸப்பா, கனவே கண்ணைக் கட்டுதே. இப்படியெல்லாம் கனவு கண்டுண்டே போனாக்க, பேசாம காங்கிரசும் பி.ஜே.பி.யும் சேர்ந்து ஆட்சி அமைஞ்சாக்கூட ஆச்சரியப்படறதுக்கு இல்லைன்னுதான் சொல்லணும். நான் கூறுவதும் அப்படியொன்றும் நடக்க முடியாத விஷயம் இல்லை. சமீபத்தில் 1966-ல் மேற்கு ஜெர்மனியில் வழக்கமான எதிரிகளான சி.டி.யு/சி.எஸ்.யு. -ம் எஸ்.பி.டி.யும் சேர்ந்து மகா கூட்டணி அமைத்தது எனக்கு இன்னும் மறக்கவில்லை.
ஜயசங்கர் ஜகன்னாதன்:
1. சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் சிலை எப்போ செய்தது?
பதில்: கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!
பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்! நன்றி ரவிசங்கர் கண்ணபிரான் (கே.ஆர்.எஸ்.) அவர்களது பதிவுக்கு.
அனானி (பிற்பகல் 03.01 மணிக்கு, 11.05.2008 அன்று கேள்வி கேட்டவர்)
1. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் உயர் சாதிப்பிரிவினர் (பிராமணர் அல்ல))(மலையில் வாழும்)நடத்தும் போராட்டம் தேவையா?
பதில்: நான் இட்ட பொங்கி எழுங்கள் தலித் சகோதரர்களே என்னும் பதிவில் விவரமாக பதில் கூறியுள்ளேனே. சம்பந்தப்பட்ட உயர்சாதியினர் பார்வையில் அவர்தம் போராட்டம் தேவையே. அதே சமயம் கலைஞர் அரசு அவர்களிடம் பல்லிளித்து கெஞ்சுவதும் அவரைப் பொருத்தவரை ஓட்டு பெறும் அரசியலுக்கு தேவையே.
2. சாதிச் சுவர் இரட்டை குவளையை விட கொடியது அல்லவா-தங்கள் கருத்து என்ன?
பதில்: இதில் என்ன சந்தேகம்? மேலும் இது சிவில் வழக்காகக்கூட வரும் வாய்ப்புள்ளது. இவ்வளவு நாட்கள் பொதுவழியை மறித்த உயர்சாதியினர் கூட்டு தண்டனைகளுக்கு உரியவர்கள்.
3. திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இது போல் கோட்டை சுவர்(கோட்டைப் பிள்ளைமார்) இருந்ததாக சொல்வார்கள்.அது போல் தான் இதுவுமா?
பதில்: தெரியவில்லை. நான் இப்போது கூகளிட்டு பார்த்ததில் கோட்டை சுவருக்குள் அவர்கள் தாங்களாகவே விரும்பி வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. ஆனால் உத்தபுரத்தில் உயர் சாதியினர் தலித்துகளை சுவற்றுக்கு பின்னால் தள்ளினர். ஆக இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
4. 300 குடும்பங்களின் போராட்டம் தேவையான ஒன்றா?
பதில்: இல்லை. அதை அரசு கண்டுகொள்வதோ அதைவிட நிச்சயமாக வேண்டாத வேலைதான்.
5. இதுவும் அரசியலா?
பதில்: ஆமாம், ஓட்டு பொறுக்கும் அரசியல்.
6. கலைஞர் இந்த விஷயத்தில் நேர்மையாகத்தான் நடந்துள்ளார் போல் தெரிகிறது?
பதில்: நன்றாகவே வழிந்தார், சில நூறு ஓட்டுகளுக்காக. அதில் நியாயம் புதைகுழிக்கு போனதில் அவருக்கு கவலையில்லை எனத் தெரிகிறது.
7. அரசின் முயற்சிகள் பலன் அளிக்குமா?
பதில்: எது, ஆளும் கட்சிக்காக ஓட்டுகளை காபந்து பண்ணும் முயற்சிகளா?
8. ஜாதி அரசியல் வானவேடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா தமிழகம்?
பதில்: அப்படியெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் அரசியல் வாதிகளின் பிழைப்புக்கு என்ன வழி?
9. வழக்கம் போல் B.J.P இதில் தலையிட்டு தலித்துகளின் வாக்கு வங்கியை முழுவதும் இழக்க முயலுமா? (பிள்ளைமார் சமுகத்தினர் b.j.p உதவியை நாடுவதாக தகவல்(j.vikatan-14.5.08)
பதில்: பி.ஜே.பி.யினர் தமிழகத்தில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் உள்ளனர். பாவம் அவர்கள்.
10. புரட்சித் தலைவியின்(ஜெயலலிதா அம்மையார்)கருத்து என்ன என்றே தெரியவில்லை,ஏன்?
பதில்: கிட்டிமுட்டிப் போனால் திராவிடக் கட்சிகள் எல்லாமே உயர் சாதியினரிடம் பயப்படுவதாகத்தான் தோன்றுகிறது. ஜெயலலிதா மட்டும் எப்படி மாறி சிந்திக்க இயலும்?
அனானி (12.05.2008 அன்று மாலை 06.13-க்கு கேள்வி கேட்டவர்)
1. பிராமணர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதால் தான் திராவிட கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்பது உண்மையா?(பிராமணர் அல்லாத பிற உயர் சாதிப் பிரிவினர்,குறிப்பாக முதலியார்,பிள்ளைமார்,கார்காத்தார்,சமுகத்தார்.)
பதில்: பிராமணர்கள் ஓட்டு வங்கியில்லாத சிறுபான்மையினர். அவர்களை பத்திரமாக எதிர்க்கலாம். மற்ற உயர் சாதியினரை எதிர்க்க இயலாது. அவர்களிடம் கெஞ்ச வேண்டியதுதான். உத்தபுரத்தில் நடப்பது போல.
2. கேரள மன்னர்கள் பிராமணர்களின் முக்கியத்துவத்தை கட்டுபடுத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுகத்தை கேரளாவில் குடியமர்த்தினர் என்ற செய்தி உண்மையா?
பதில்: தெரியாது. நீங்கள் சொல்லித்தான் இதைப் பற்றி கேள்விப்படுகிறேன். கேரள தேசம் ஜாதி குழப்பங்களுக்கு பேர்போனது என்பதை மட்டும் அறிவேன்.
3. எட்டுவீட்டு பிள்ளைமார் செய்த கலகத்தை அடக்க சிங்கம்பட்டி ஜமீந்தார் கேரளா சென்றார் என்ற தகவல் உண்மையா?
பதில்: விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். நன்றி பி.என்.எஸ். பாண்டியன் அவர்கள். அவர் எழுதிய இப்பதிவுக்கு முழுவிவரங்களை அறியச் செல்லவும்.
4. பிராமணர்களும் தலித்துகளும் உ.பி. மாநிலத்தில் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல் தமிழகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதா?
பதில்: இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் தமிழகத்தில் போதுமான வாக்குவங்கி தங்களிடம் வைத்திருக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தின் கதை வேறு.
5. அதை தாங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: தேவையில்லை
6. சமதர்ம சமுதாயம் உருவாக அது வழி கோலுமா?
பதில்: இக்கேள்வியை எழுப்பவே முகாந்திரம் இல்லை.
7. கலப்புத் திருமணங்கள் இதற்கு உறுதுணையாகுமா?
பதில்: ஆகாது.
8. தலித் குடும்பங்கள் தங்கள் இல்ல வைபோகங்களுக்கு பிராமண வைதீகர்களை அழைப்பது தற்சமயம் சர்வசாதாரணம்; கோயில் தர்ம காரியங்களிலும் தலித் சகோதரர்கள் ஈடுபடுவது கண்கூடு. ஆக, தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,தமிழினத் தலைவர் கலைஞர்
கனவு நனவாகுமா?
பதில்: இதில் தந்தை பெரியாரோ அறிஞர் அண்ணாவோ, கலைஞரோ திடீரென எங்கிருந்து வந்தனர்? ஒரிஸ்ஸாவில் தலித்துகள் தங்களுக்காக கட்டிக் கொண்ட கோவிலில் பார்ப்பனரைத்தான் அர்ச்சகராக நியமித்து கொண்டனர். பக்தி செலுத்துவதில் தலித்துகள் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களை ஒதுக்கி வைப்பது ஹிந்து மதம் தனக்கு தானே செய்து கொள்ளும் தீது. வன்கொடுமைக்கு எதிராக எனது மிக பலமான கண்டனத்தை இங்கு இடுகிறேன். ஆகவேதான் மிக ஆதங்கத்துடன் அவர்கள் தங்களை தாங்களே உயர்த்தி கொள்ள பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தங்கள் சேவைகளை மலிவாக தரக்கூடாது. நான் மட்டும் தலித்தாக பிறந்திருந்தால் அவர்கள் அளவு பொறுமையாக இருந்திருக்க மாட்டேன். சமுதாயப் பெரியவர்களுக்கு பல ஆலோசனைகள் தந்து உயர்சாதிக்காரர்களை டரியல் ஆக்கியிருப்பேன். நான் தலித்தாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதையும் ஒரு பதிவாகப் போட்டுள்ளேன்.
அனானி (12.05.2008, மாலை 07.24-க்கு கேள்வி கேட்டவர்)
1. பணவீக்கம் உயர்வுக்கு தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமா?
பதில்: பணப்புழக்கம் அதிகரித்து உற்பத்தி குறையும் போது பணவீக்கம் சாதாரணமாக ஏற்படும். உற்பத்தியை அட்ஜஸ்ட் செய்வது trial and error ஆகவே போகிறது.
2. தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம் இந்தியாவை இன்னொரு எத்தியோப்பியா ஆக்குமா?
பதில்: அதையெல்லாம் நடக்காது தடுத்து உலகமயமாக்கலை நமக்கு சாதகமாகத் திருப்புவதுதான் அறிவுள்ளவன் செய்யக்கூடிய செயல்.
3. தொழில் தர்மம் இல்லா வணிகர்கள் (ஒரு பகுதியினர்) தான் இதற்கு காரணமா?
பதில்: அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். அரசின் கொள்கை குழப்பங்களும் ஒரு காரணமே.
4. Online trading செய்யும் சேட்டை இதுவா?
பதில்: Online trading பற்றி நான் அதிகம் அறியவில்லை.
5. பங்குவர்த்தகம் குழி தோண்டி குப்புறத் தள்ளும் குதிரையாய் மாறும் போல் உள்ளதே?
பதில்: பங்குவர்த்தகத்தை சூதாட்டமாக நினைத்து ஆடினால் அதுதான் கதி.
6. வழக்கம் போல் விலை வாசி எதிர்ப்பு செயலில் இடது சாரிகள் "வாய்ச் சொல் வீரரா?
பதில்: அவர்கள் என்ன செய்வார்கள்? அறிவை வைத்துகொண்டா தர மாட்டேன் என்கிறார்கள்?
7. இடைத்தேர்தல் count down தொடக்கமா?
பதில்: எந்த இடைத்தேர்தல்?
8. எல்லா மாநிலங்களை விட தமிழகத்தின் நிலை பாராட்டுவது போல் உள்ளதற்கு கழக நிர்வாக ஆட்சி முறை காரணமா?
பதில்: நமது முதல்வரின் தமிழறிவுக்கு ஈடான தமிழறிவு மற்ற மாநிலத்து முதல்வர்களுக்கில்லை என்று வேண்டுமானால் பெருமை பட்டுக் கொள்ளுங்களேன். யார் தடுப்பது? மற்றப்படி வேறெந்த நிலையை பற்றி கேட்கிறீர்கள்?
9. பழைய மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சி போல் வருவதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: அந்த ஆட்சி மிகக் குறுகிய காலமே இருந்தது. அதுவும் உட்கலகங்களால் பீடிக்கப்பட்டது. அதன் ஆட்சி மதிப்பீடு செய்யும் அளவுக்கு நீடிக்கவில்லை.
10. நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா? நன்மை பயக்குமா?
பதில்: அவருக்கு 1996-ல் சான்ஸ் கிடைத்தது. கோட்டை விட்டார். அவ்வளவுதான் விஷயம்.
விக்ரம்:
1) As far as you dont cheat, be honest, work hard, is it such a big crime to earn for you and your family and be selfish? Why, then, some fellows see that as a big crime?
பதில்: உண்மை என்னவென்றால், எல்லோருமே தத்தம் நலனை பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள். மேலுக்கு மட்டும் பொது நலம் என்றெல்லாம் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் என்ன நினைத்தால் யாருக்கென்ன நஷ்டம்? அவரவர் நலனை கவனித்து கொண்டு போவதுதான் நல்லது.
2) Any plan of starting some post on mild harmless, A Jokes to make the readers happy?
பதில்: இல்லை. நேரில் பார்த்தால் பல அசைவ ஜோக்குகள் கைவசம் உள்ளன. எழுத்தில் அவை வேண்டாம். ஆளை விடுங்கள்.
3) Like in some countries such as Dubai, is there a possibility in India too, that there will be no income tax, someday?
பதில்: எண்பதுகளில் வருமான வரி ஒழிக்கப்படும் என்ற மாதிரி ஒரு எண்ணம் வந்தது. அதாவது முதலில் எஸ்டேட் டியூட்டி ஒழிக்கப்பட்டது. பிறகு சென்றது கிஃப்ட் டாக்ஸ். கம்பெனிகள் மேல் விதிக்கப்பட்ட surtax-ம் எடுக்கப்பட்டது. "இதே மாதிரி நடந்து கொண்டே போனால், என்னைப் போன்ற வரி ஆலோசகர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவது திண்ணம்" என்ற ரேஞ்சுக்கு ஒரு வருமானவரி ஆலோசகர் குறிப்பு எழுதும் அளவுக்கு அது சென்றது என்று அதே வருமானவரி ஆலோசகரிடமிருந்து அறிந்தேன். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அதே ஆலோசகரிடம் எஸ்.டி.டி. மூலம் பேசி கன்ஃபர்ம் செய்து கொண்டேன், எனது ஞாபகசக்தியில் பிழை ஏதும் இல்லை என்று. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தால் நல்லதுதான்.
4) When do you think that the big and widening gap between the rich and poor will be narrowed?
பதில்: பழைய சோஷலிச காலங்களில் செல்வந்தர்களை ஏழையாக்குவதன் மூலம் அந்த இடைவெளியை குறைக்க முயற்சி செய்தனர். அதனால் இடைவெளிய் குறைந்ததோ இல்லையோ பணக்காரர்களை சதாய்ப்பது ஏழைகளுக்கு சந்தோஷம் தரும் என்ற நினைப்பில் காய்கள் நகர்த்தப்பட்டன. ஆனால் தற்சமயம் அது நடக்காது. பணக்காரர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மனது இருந்து, விடாமுயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானால் முன்னேறலாம் என்ற நிலை வந்துள்ளது. அதே சமயம் சோம்பித் திரிந்தால் சங்குதான் என்பதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்போது என்ன நடக்கிறதென்றால் புது பணக்காரர்கள் ஏழைகளை வஞ்சித்துதான் உயர்ந்துள்ளனர் போன்ற தோற்றம் தருகின்றனர். புது பணக்காரர்களை பலருக்கு ஏன் பிடிப்பதில்லை என்ற எனது பதிவில் நான் இது பற்றி எழுதியுள்ளேன்.
5) Is there a way to make the politicians (who always enjoy all facilities like a/c, car, bungalow, good food etc), suffer like ordinary people like us, by exposing them to crowd, queue, sweat, unclean,dirty, smelly public toilets, garbage, bad roads, traffic jam etc etc? so that they will realize the common man's problems....?
பதில்: நல்ல கனவு. நிறைவேற என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
அனானி (14.05.2008 மாலை 07.55க்கு கேள்விகள் கேட்டவர்):
1. புதிய பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கபட்ட நாள் முதல் நமது GDP 8% என்று சொல்லப்பட்டு வந்ததே திடிரென என்னாவாயிற்று? ஏன் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு (7.5%) உள்ளதாக கூறப்படுகிறது? யார் காரணம்,விளக்குக?
பதில்: பணவீக்கம் என்பது பல காரணங்களால் வருவது. இது பற்றி நான் மேலே ஒரு கேள்வியில் ஏற்கனவே பதிலளித்து விட்டேன்.
2. பங்கு சந்தையில் ஏற்படும் திடீர் உயர்வு/குறைவு ஏன் ஏற்படுகிறது?
பதில்: அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்தான். அவர்கள் திடீரென முதலீட்டை அதிகரிக்கின்றனர். திடீரென குறைக்கின்றனர். நம் ஷேர் மார்க்கெட்டும் எகிறுகிறது, தாழ்கிறது. மேலே விவரங்களைப் பார்க்க அணுகவும் நண்பர் வால்பையனை.
3. உணவுப் பொருள்களின் திடீர் 50 -60% விலையேற்றம் யாரால் ஏற்படுகிறது?
பதில்: நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது பொருட்களை பதுக்குதல் மிக சாதாரணம். அதுவும் அமெரிக்காவில் பல விளைநிலங்கள் எரிபொருள் உற்பத்திக்கு திசை திருப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிர்கள் சாவியாகப் போனது. இப்படி பல காரணங்கள் உண்டு. நமது பொது தானியசேமிப்பும் குறைந்துள்ளது.
4. விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்?
பதில்: மேலே உள்ள கேள்வியில் குறிப்பிடப்பட்ட உணவு விலைகள் விவசாயிகளுக்கு போகாது இடை தரகர்களுக்கு சென்றதும் ஒரு காரணம்.
5. 60,000 கோடி கடன் தள்ளுபடிக்கும் பின்னும் அவர்கள்(பொருளாதர) நிலை பரிதாபமாக உள்ளதே ஏன்?
பதில்: முதற்கண் சம்பந்தப்பட்ட தொகை அவ்வளவு அதிகம் இல்லை. அதனில் பாதிக்கும் குறைவே. அதுவும் கூட்டுறவு/ பாங்கு கடன்கள் மட்டுமே, தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகல் மாட்டி கொண்டிருப்பது கந்து வட்டிக்காரர்களிடம். அதற்கு எந்த நிவாரணமும் தரப்படவில்லை.
6. பாரம்பரிய தொழில்கள் நலிந்து வருகிறதே,அந்தப் பணியாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: உதாரணம் கூறுங்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அது தற்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது மேன்யுவல் தட்டச்சு யந்திரங்களை யார் வாங்குகிறார்கள்? ஆகவே அதை மட்டும் செர்வீஸ் செய்யத் தெரிந்தவர்கள் பாடு திண்டாட்டம். வி.சி.ஆர். மெக்கானிக்குகளுக்கும் அதே கதி. பல கம்பெனிகளில் இப்போதெல்லாம் ஸ்டெனோக்கள், டைப்பிஸ்டுகள் ஆகியோரை வேலைக்கெடுப்பது மிகவுமே குறைந்து விட்டது. பேங்குகளில் இத்தனை பேர் வி.ஆர்.எஸ்ஸில். போனாலும் இன்னும் வேலை நன்றாகத்தானே நடக்கிறது, கணினியின் தயவால். உண்மை கூறப்போனால் ஏற்கனவே பல காரணங்களுக்காக மிக அதிக அளவில் ஆட்கள் சம்பளத்துக்கு எடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புலப்பட ஆரம்பித்துள்ளது.
7. இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் குறைந்துள்ளதா?இல்லையா?
பதில்: கண்டிப்பாக இல்லை. அதுவும் எண்ணெய் இறக்குமதி நாடாக நாம் இருக்கும் வரை அதுதான் நிலைமை.
8. பொருளாதார வளர்ச்சி 70 % மக்களுக்கு போய் சேரவில்லை என இடதுசாரி கட்சிகளின் ஆதங்கம் உண்மையா?
பதில்: ஆதங்கம் படுவதோடு சரி. மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் அதற்கான முயற்சிகள் ஒன்றும் எடுப்பதாகக் காணோமே.
9. தேர்தல் அறிக்கை மூலம் வாக்களர்களுக்கு இலவசங்கள் அள்ளி கொடுக்கப்படுகிறதே? இது எங்கே கொண்டுபோய் விடும்?(ஒரு ஓட்டுக்கு மாதம் ரூபாய் 1000/= கொடுப்பதாக கூட அறிக்கை கண்ணில் படுகிறதே)
பதில்: யார் வீட்டு பணத்தை யார் அளிப்பது? எனக்கு தெரிந்து இலவசம் எல்லாம் தரமாட்டேன் என்று சொல்லியும் மிகப் பெரிய வெற்றி பெற்ற முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று ஊகித்து கூறுவதற்கெல்லாம் பரிசு கிடையாது என்பதையும் கூறிவிடுகிறேன். :)))))))
10. வங்க மாநிலத்தில் தனியார்மயத்தை ஆதரிக்கும்,இடதுசாரிகள் அதை எதிர்த்து நடுவண் (central government)ஆட்சியையே கவிழ்க்க முயலுவதுபோல் காட்சிகள் செய்விக்கப்படுகின்றனவே, ஏன், விளக்குக?
பதில்: பார்ப்போம், இந்த கண்ணாமூச்சி எத்தனை நாளுக்கென்று. மிக திறமையான பிரதமரை கோமாளியாக செயல்பட செய்யும் கம்யூனிஸ்டுகள் கண்டனத்துக்குரியவர்கள்.
சரவணன்:
1. தாங்கள் கிண்டி காலேஜ், அண்ணா யுனிவர்சிடியில் படிக்கும்போது நடந்த சுவையான சம்பவம் ஒன்று... (நானும் அங்கதான் படிச்சேன் அதான் காலேஜ் பாசத்துல வந்து உங்க பதிவுல கும்மியடிக்கறேன்)
பதில்: பொறியியல் கல்லூரி நினைவுகள் மிகவும் இனிமையானவை. நான் சமீபத்தில் 1963-ஆம் வருடம் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்த சமயம் என் நண்பர்களுக்கு ஒரு நீதிக்கதை கூறினேன். அதை படித்து கருத்து சொல்லவும்.
அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
5/16/2008
டோண்டு பதில்கள் - 16.05.2008
5/15/2008
முரட்டு வைத்தியம் - 6
முரட்டு வைத்தியம் - 5-ன் தொடர்ச்சி இப்பதிவு.
சாதாரணமாக Efficient என்னும் வார்த்தை திறமையை குறிப்பிடும் நல்ல சொல். ஆனால் அதே Efficient சில இடங்களில் காரியத்தை கெடுக்கும். இது என்ன புதுக்கதை என்பவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
பொதுவாக டயட்டில் இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. அதாவது முதலில் கொஞ்சம் எடை குறையும், பிறகு ஒரு அளவுக்கு பின்னால் என்ன டயட் செய்தாலும் ஒரு அணுகூட குறையாது. அதே சமயம் டயட்டை விட்டாலோ எகிறிக் கொண்டு எடை ஏறிவிடும்.பழைய அளவையும் தாண்டி விடும். இதற்கு காரணம் அவரது உடல் Energy efficient ஆவதே.
அதாவது உணவு முதலியன குறையும்போது உடல் மெக்கானிசம் தானாகவே குறைந்த அளவு செயல்பாட்டுக்கு சென்றுவிடும். குளிர்க்காலங்களில் பனிப்பிரதேசங்களில் கரடிகள் சீசன் முழுக்க தூங்கச் செல்லும் hibernation என்னும் செயல்பாடு இந்த தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டது. அப்போது மட்டும் தூங்கும் mode-க்கு செல்லாது செயல்பாட்டுடன் இருந்தால் கரடி பட்டினியில் செத்துவிடும், ஏனெனில் குளிர்காலத்தில் அதற்கு போதிய இரை கிடைக்காது.
மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியில் மிக சமீபகாலமாகத்தான் அடுத்த வேளை உணவை பற்றிய கவலை பெருமளவு குறைந்துள்ளது. மனித குலத்தையே நாசம் செய்த பல பஞ்சங்கள் - உதாரணம் தாது வருட பஞ்சம், 1943-ல் வங்காளத்தில் வந்த பஞ்சம் ஆகியவை - தற்போது அவ்வளவாக இல்லை, ஈத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளைத் தவிர்த்து. ஆகவே இப்போது இப்பதிவில் குறிப்பிடப்படும் Energy efficient என்ற நிலைப்பாட்டின் பிரச்சினை முதலில் காலத்தின் கட்டாயத்தால்தான் உருவானது.
உடல் பருமனாதல் என்றால் என்ன? நாம் உட்கொள்ளும் கலோரிகள் நம் உடனடி தேவைகளுக்கு அதிகமாக இருப்பதால், மிகுதியான கலோரிகள் கொழுப்புகளாக உடலில் குடி கொள்கின்றன. போலீஸ் தொப்பையும் அதன் ஒரு விளைவுதான். ஆகவே சாப்பாட்டை குறைத்தால் போதும் என நினைப்பவர்கள் தட்டையாக சிந்திக்கிறார்கள் என்பதுதான் நகை முரண். சாப்பாட்டை குறைத்தால் நான் மேலே சொன்னபடி உடல் Energy efficient ஆகிவிடுவதால், குறைந்த அளவு உட்கொள்ளும் உணவு வகைகளே கொழுப்பாக சேர்கின்றன அல்லது டயட்டை விட்டால் பழிவாங்குவது போல விரைந்து வந்து எடை மற்றும் உடல் கொழுப்பை அதிகரிக்கின்றன. அதற்கு என்ன வழி?
அதுதான் மெழுகுவர்த்தியை இரண்டு பக்கமிருந்தும் எரிப்பது. அதாவது, உணவை குறைக்க வேண்டும், அதே சமயம் உடற்பயிற்சியை அதிகரிக்கவும் வேண்டும். அதற்காக ஜிம்முக்கெல்லாம் போக எல்லோராலும் முடியுமா என்ன? அதற்கான நேரமும் இருக்காதே. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கடைபிடித்த வழிதான் அதிவேக நடை. இப்போதும் அதைத்தான் கடைபிடிக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னால் நண்பர் மா.சிவக்குமார் வீட்டுக்கு வந்திருந்தார். பார்த்த உடனேயே கூறிவிட்டார், எனது பருமன் மிகவும் குறைந்து விட்டதாக. மனதுக்கு நிறைவாக இருந்தது. ஆனால் ஒன்றை கூற வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெற்ற வெற்றி ஐந்தே மாதங்களில் வந்தது. ஆனால் இம்முறை சற்று தாமதமாகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நடுவில் மிக அதிகமாகவே பருத்து விட்டேன் என்று. அந்த பாவமூட்டை தீர அதிக நாட்கள் பிடிக்கின்றன. ஆனாலும் டவுசர் லூசாவது தொடர் கதையாகத்தான் உள்ளது.
இப்பதிவை போடுவதன் நோக்கம், ஒரு இடைக்கால பிராக்ரஸ் ரிப்போர்ட் தருவதே.
ஓக்கே. வாக் போக வேண்டும், பிறகு பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
5/13/2008
I don't fully agree with you Professor Adam Smith
ஆடம் ஸ்மித்துடன் எதெதில் ஒத்து கொள்வதற்கில்லை என்று கூறும் முன்னால் பலவற்றை ஒத்து கொள்கிறேன் என்றுதான் கூற வேண்டும். அவற்றை முதலில் பார்ப்போம்.
"கடைசி ஓரிரு நூற்றாண்டுகளில் உலகம் நிஜமாகவே மாறியுள்ளது. இந்த மாறுதல்கள் வெவ்வேறு அளவுகளில் உலகின் வெவ்வேறு இடங்களில் பரவியதற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறவேண்டுமானால் அதுதான்: சுதந்திரம். சுதந்திர சூழ்நிலையில் மனித மனம் செழித்தோங்குவது நிரந்தரமானது. அந்த சுதந்திரத்தை நல்ல முறையில் பாவித்த நாடுகள் முன்னேற்றம் அடைந்தன. மற்றவை அடையவில்லை."
சத்தியமான வார்த்தை. சோவியத் யூனியன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அங்கெல்லாம் மத்திய கேந்திரத்திலிருந்து திட்டமிடுவார்கள். யார், எங்கே எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மாஸ்கோதான் தீர்மானித்தது. அங்கிருந்து ஒருவரால் சைபீரியாவின் கிழக்கு கோடியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் காலத் தாமதம் ஏற்படும். அதை அவதானித்து திட்டம் போட்டு சைபீரியாவுக்கு திருப்ப அனுப்பும் முன்னரே அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். இதனால் குளறுபடிகள் ஏற்படும். இதற்கு யார் பொறுப்பு என்று சண்டை மண்டை உடையும். நிலைமையை அவதானிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ இராது. இதுவே சோவியத் யூனியன் மொத்தத்துக்குமே என்பதை கற்பனை செய்து பாருங்கள். இருப்பினும் சோவியத் யூனியன் பல துறைகளில் முன்னேறியது என்றால் அது சராசரி ரஷ்ய குடிமகனின் உழைப்பு மற்றும் தேசப்பற்றுதான். Progress was not because of planning but in spite of planning. அங்கு மட்டும் பொருளாதார சுதந்திரம் இருந்திருந்தால் ரஷ்யா இன்னேரத்துக்கு அமெரிக்காவை பல மடங்கு மிஞ்சியிருக்கும். கம்யூனிசம்தான் ரஷ்யாவின் உண்மையான சோகம்.
"காலனி அரசின் அத்தனை அமைப்புகளையும் அப்படியே பெற்று கொண்டது இந்திய அரசு. அரசியல் அதிகாரம் என்பது போதையளிக்கக் கூடியது. சுலபத்தில் அதை விட்டுவிட மனம் வராது. ஆட்சியாளர்கள் அந்த போதையில் ஆழ்ந்தனர். அப்படியே வண்டியை நடத்தி செல்வதில் அவர்கள் சௌகரியத்தை உணர்ந்தனர். அவர்களது சுயநலம் பொது நலத்தை வரவிடாது செய்து விட்டது."
எல்லாவற்றுக்கும் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா என்று செய்து பொருளாதார முன்னேற்றத்தை அடமானம் வைத்து விட்டது இந்தியாவின் சோஷலிச சர்க்கார். உற்பத்தியை பெருக்க இயலாது, ஏனெனில் அதுவும் லைசன்ஸுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 1991-ல் இந்தியாவின் தங்கத்தையே அடமானம் வைக்க வேண்டிய நிலை வர நரசிம்மராவ் அரசு விழித்து கொண்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் 44 ஆண்டுகள் வீணாகப் போனது போனதுதான். மாமனிதர் ராஜாஜி கேலியாகக் கூறிய பெர்மிட், லைசன்ஸ் கோட்டா ராஜ் இந்தியாவின் சோகம்.
"கசாப்பு கடைக்காரன், பீர் தயார் செய்பவன், ரொட்டி சுடுபவன் ஆகியோரது தர்ம சிந்தனையால் நமது சாப்பாடு கிடைப்பதில்லை நம்மிடமிருந்து வரும் பணத்துக்காகத்தான் அவர்கள் தொழில் செய்கின்றனர். ஆக ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது முக்கியமாக தன்னலம் கருதியே. இந்த பொதுவாகக் காணப்படும் தன்னல எண்ணங்கள் சரியான பாதையில் திருப்ப முடியுமானால் பொதுநலம் தானே உருவாகும். அடுத்த வாரத்துக்குள் பலான அளவு பொது நலம் தேவை என்று யாரும் பிரதிக்ஞை எடுத்து வேலை செய்வதில்லை. அது சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாமல் கூட வந்து விடுகிறது. இவ்வாறு வரும் பொது முன்னேற்றம் பொது நலம் வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்து தீர்மானிப்பதால் வரும் பொது முன்னேற்றத்தைவிட பல மடங்கு அதிகம். அதுதான் பொருளாதார சுதந்திரத்தின் பலம்".
மிகவும் உண்மை. அவரவர் நலன்களில் கவனம் செலுத்தி செயலாற்றும்போது வணிகம் பெருகி பொது நலம் தானே ஏற்படுகிறது. அவ்வாறு வருவது நிலைத்தும் நிற்கிறது. மறுபடியும் சோவியத் யூனியனின் உதாரணத்தையே எடுத்து கொள்வோம். அதனுடைய கடைசி காலங்களில் கூட்டுறவு பண்ணையில் உற்பத்தி மந்தம். அதே சமயம் ஒவ்வொரு ரஷ்ய குடும்பத்துக்கும் சிறிய துண்டு நிலங்கள் தோட்டம்போட ஒதுக்கப்பட்டன. அவற்றில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதை வேண்டுமானாலும் பயிரிடலாம். அவர்கள் காய்கறி செடிகொடிகள், பழ மரங்கள் ஆகியவற்றை நட்டு, அவற்றுக்காக உயிரை கொடுத்து பாடுபட்டனர். அதில் விளைவதை அரசின் தலையீடின்றி அவர்களால் விற்க முடிந்தது. அவ்வாறு விற்பனையானதுதான் சோவியத் யூனியனின் தேவைகளை கணிசமாக பூர்த்தி செய்தன. அரசும் அதை கண்டு கொள்ளாமல் விட்டதற்கும் அதுவே காரணம். சோவியத் நிலைமை அது இல்லாது இருந்தால் ரொம்பவும் முன்னாலேயே திவாலாகியிருக்கும். அதுதான் கசப்பான உண்மை.
"சந்தைக்கு மக்கள் வருவதின் முக்கிய நோக்கமே பொருள்கள் மற்றும் சேவைகளை விற்க மற்றும் வாங்குவதற்குத்தான். விற்பனையாளர்களாக போட்டி போட்டு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கிறார்கள். அவர்கள் வாங்குபவர்களாகவும் போட்டி போடுகிறார்கள். அதன் மூலம் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குகிறார்கள். இதில் அளிப்பு மற்றும் தேவை ஆகிய இரண்டு விஷயங்கள் செயல் புரிகின்றன. அதன் மூலம் எவ்வளவு உற்பத்தி யார் செய்வது என்பது ஒருமாதிரியாக நிலை பெறுகிறது. அதன் மூலம் சமூகத்தில் குறிப்பிட்ட அளவுக்கே உள்ள வளங்கள் மிகச்சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்படுகிறன".
ஒத்து கொள்கிறேன். நமது நாட்டில் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் நிலை என்ன. இரண்டே இரண்டு மேக் கார்கள் சாலைகளில் பவனி வந்தன. அவற்றுக்கும் புக் செய்து ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டும். தரமா, அப்படியென்றால் என்ன என்ற நிலைதான். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்தானே. காசு கொடுத்து காரை ஓட்டிவர இயலும். தரக்கட்டுப்பாட்டுக்கு கார் கம்பெனிகள் மெனக்கெடுகின்றன. இல்லாவிட்டால் அவற்றுக்கு சங்குதான். சுதந்திரத்தால் உற்பத்தி பெருகியது. போட்டியால் தரம் உயர்ந்தது.
இதுவரை நான் முழுக்க முழுக்க ஒத்து கொண்ட விஷயங்கள் பற்றி கூறினேன். அபிப்பிராய பேதங்கள் பற்றியும் கூறவேண்டும்.
"கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குங்கள்".
அவ்வாறு தட்டையாக கூற இயலாது ஆடம் ஸ்மித் அவர்களே. எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு அதை இலவசமாக்கியாவது அவர்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம்தான் தருகிறார்கள். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் கூலிக்கு மாறடிப்பதாக தோற்றம் உள்ளது. கிராமங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நகரங்களுக்கு மாற்றல் வாங்கி செல்வதிலேயே குறியாக உள்ளனர். பல கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் வருவதே இல்லை. அதையெல்லாம் சரி செய்ய வேண்டும். தனியார் கிராமப் பள்ளிகளில் முதலீடு செய்வார்கள் என்பதை தற்போதைய நிலையில் எதிர்ப்பார்க்க இயலாது என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. இருக்கும் அரசு பள்ளிகளை சரியாக இயங்கச் செய்வது அரசின் கடமை. நகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் வெள்ளம் போன்ற சமயங்களில் பள்ளிகளில் மக்களை தங்க வைப்பது நிறுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் படிப்பு தடைபடுகிறது. பள்ளி ஆசிரியர்களை வெளி வேலைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் (உதாரணம்: குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஆள்சேர்த்தல், ரேஷன் கார்டுக்காக வீடுவீடாக சென்று தகவல் சேகரிப்பது ஆகியவை). ஆக அரசு கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
"சூரிய சக்தியை நாடுவது நலம்".
இந்த விஷயத்திலும் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக படித்துள்ளேன். இப்போதுள்ள முறைபடி அவற்றின் செயதிறன் ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். தியரிட்டிகலாகப் பார்த்தாலும் இது தாண்டாது என்றுதான் தோன்றுகிறது. சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் முறையில் ஒரு புரட்சி தேவை. நினைப்புகள் அடியோடு மாற்றப்பட வேண்டும். அதே சமயம் அணுசக்தியிலும் கலாட்டாக்கள் அதிகம். செர்னோபில் இன்னும் மறக்கபடவில்லை. இந்தியா பல முனைகளில் பிரச்சினயை அணுக வேண்டியிருக்கிறது.
இப்போதைக்கு தோன்றியது இவ்வளவுதான். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டங்களில் கூறுங்கள். மேலே விவாதிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார், நீங்கதான் ஆடம் ஸ்மித்னு நினைக்கிறேன்
பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் ஆடம் ஸ்மித்தின் பெயரை கேள்விப்படாது இருக்க முடியாது. பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு definition கொடுத்தவர்களில் முதன்மையானவர் அவர். பொருளாதாரம் என்பது செல்வத்தை பற்றி ஆராய்வது ஆகும் (Economics is a science of wealth) என்று அவர் கூறியதாக சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் புகுமுக வகுப்பில் (P.U.C.) படித்தபோது அறிந்து கொண்டேன். இந்த டெஃபினிஷன் பணத்தை ஆராதனை செய்வது போல இருக்கிறது (worship of Mammon) என்று மற்றப்படி தாங்கள் மட்டும் பணக்காரர்களாக இருப்பதற்காக ஆட்டம் போட்ட மதகுருக்களும், அவர்களது சிஷ்யகோடிகளும் கூறினர். எது எப்படியானாலும் செல்வம் உற்பத்தி செய்யப்பட்டால்தான் எல்லோருக்கும் சோறு என்ற நிலைமை தானாகவே உருவாகி இப்போது ஆடம் ஸ்மித்தின் வார்த்தைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக நண்பர் ஜெயகமல் அனுப்பிய இந்த கற்பனை நேர்க்காணல் மிகுந்த கவனத்துக்குரியது. இதை எழுதியது Atanu Dey என்பவர்.
அதானு கூறுகிறார், "சில நாட்களுக்கு முன்னால் நான் ஆடம் ஸ்மித் அவர்களுடைய ஆவியை நேர்க்காணல் கண்டேன். Dr Adam Smith (1723-1790), கிளாஸ்கோ பலகலைகழகத்தில் moral philosophy துறையின் பேராசிரியர் அவர் Fellow of the Royal Society of London and Edinburgh. மனித இயற்கையை கூர்ந்து கவனித்தவர் அவர். அவரது புத்தகமான “தேசங்களது செல்வங்கள் மற்றும் அவற்றின் தன்மைகள்” அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரம் அடைந்த அதே 1776-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாம் வசிக்கும் இவ்வுலகு அடைந்த பலமாறுதல்களுக்கு